Thursday, August 27, 2009

அறுவைசிகிச்சை வெற்றி;நலமுடன் உள்ளார்

இன்று (27ம்தேதி) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார், என்ற இனிப்பான செய்தி நண்பர்கள் மூலம் கிடைத்தது. செந்தில்நாதன் அவர்களுடைய சிகிச்சைக்காக‌ பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. பிரார்த்தனையில் ஈடுபட்ட தமிழ் உலகம் நண்பர்களுக்கும், தமிழ் உலக அறிவிப்பை தமிழ்மணம் முகப்பில் வெளியிட்டு அதனால் நாங்களும் என்று தெரிவித்த‌ஈரநெஞ்சங்களுக்கும் தமிழ் உலகம் மடற்குழுவின் பிரார்த்தனை மையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்மணம் நிர்வாகத்துக்கும் எம் நன்றிகள்.

தொடர்ந்து அவர் நலமுடன் திகழ உங்கள் அன்றாட பிரார்த்தனையில் வேண்டிக்கொள்ளுங்கள்.
நன்றிகளுடன்,
ஆல்பர்ட்,
தமிழ் உலகம் பிரார்த்தனை மையம்.

Tuesday, August 25, 2009

வலைப்பதிவர் செந்தில்நாதன் அவர்களுக்கான கூட்டுப்பிரார்த்தனை

வலைப்பதிவர் செந்தில்நாதன் அவர்களுக்கான கூட்டுப்பிரார்த்தனை
அன்பினிய நண்பர்களே!

வலைப்பதிவுலகில் சிங்கை வலைப்பதிவரான‌ நண்.செந்தில் நாதன் அவர்களுக்கு
27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 10 மணியளவில்
சிங்கப்பூர் பொதுமருத்துவமனையின் தேசிய இதய(National Heart center)
மையத்தில் VAD ( Ventricular Assisting Device) . பொருத்தும் அறுவைசிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை
குறைந்தபட்சம் 7முதல் எட்டு மணி நேரம் நடைபெறும் என்று தெரிகிறது.

சிகிச்சை வெற்றிகரமாக நல்லபடியாக நடைபெற்று அவர் பரிபூரண குணமடைந்து
முற்றிலும் முன் போல் நடமாட நம்மோடு உறவாட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். இந்தப் பிரார்த்தனையை உங்களுக்குத் தெரிந்த
மடற்குழுமங்கள் வலைப்பதிவர்களுக்கு அனுப்பி இந்தக் கூட்டுவழிபாட்டில்
பங்கேற்க வேண்டுகிறோம்.

நாள்தோறும் பிரார்த்திப்பவர்கள் தங்கள் அன்றாட பிரார்த்தனையோடு
திரு.செந்தில் நாதன் அவர்கள் நலமடைய பிரார்த்தியுங்கள்.
27.08.2009 வியாழன் அன்று நாம் அவருக்காக
ஒரு கூட்டுப்பிரார்த்தனையை செய்வோம்.

நம்மில் ஒரு நண்பருக்கு, சகோதரருக்கு சுகவீனம் எனும்போது
உள்ளம் பதறுகிறது.நண்.செந்தில் நாதன் இளைஞர். 5வயது சிறுமிக்கு தந்தை.
அவர்களின் சிறு குடும்பத்தாருக்கு இது சோதனையான நேரம்; அவர்களுக்கு நம்
கூட்டுப்பிரார்த்தனை அவர்களின் கண்ணீரைத் துடைத்து நம்பிக்கையை
அளிக்கவல்லதாக இருக்கட்டும்.

"உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்
குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என்
பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"
- இயேசுபிரான் மத்தேயு : 19 - 19

"நீங்கள் என் நாமத்தினாலே, எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா
மகிமைப்படும்படியாக, அதைச் செயவேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்
கேட்டாலும், அதை நான் செய்வேன்". யோவான் : 13 - 13,14

"என்னுடைய வேண்டுதலை அவர் பாதப்படியில் வைத்துவிட்டேன்.
"நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு
சொல்லவில்லையா" என்றும் ஆண்டவர் கூறியிருக்கிறார்.
யோவான் : 11 ‍ 40 என்கிற‌து கிறித்தவ‌ம்!

யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து
நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே!
அல்லாஹ் (விதித்தவற்றிலிருந்து) விலகவோ, (விதிக்காதவற்றை செய்ய) சக்தி
பெறவோ அவன் துணையின்றி முடியாது,என்கிறது இஸ்லாம்!

”பாங்கிற்கும் இகாமத்திற்குமிடையில் செய்யப்படும் துஆ (பிரார்த்தனை)
ஏற்கப்படாமல் திருப்பியனுப்பப்படுவதில்லை” என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

கூட்டு பிரார்த்தனை செய்யும் போது இறைவன் செவி சாய்ப்பார் என்பது அப்பர்,
திருஞானசம்பந்தர் கூற்று. சிறு சிறு நூல்கள் ஒன்றிணைத்து வடமாக தேரை
இழுப்பது போல் கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை உண்டு.

அடியார் சிலர் உன் அருள்பெற்றார்
அந்தமின்றி அகம் நெகவே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக்
களைந்து உன் கருணைக் கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவாது உருக அருளாயே.
திருச்சிற்றம்பலம் என்று ச‌ர்வ‌ம‌த‌ங்க‌ளும் பிரார்த்த‌னையின் ம‌கிமையை
விள‌ம்புகிற‌து.

நண்.செந்தில் நாதன் அவர்களுக்காக‌ நம் கூட்டுப் பிரார்த்தனை
நடைபெறுகிறது.

நல்ல எண்ணம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லம் இறைவன் உறைகிறான். இறைமை
என்பது அடிப்படையில் மனித நேயம் பேசுவதுதான். வீடு பேறு என்பது தனி மனித
முயற்ச்சியில்தான் நடைபெறும் என்பது விதியாக இருப்பினும், தனி மனித
விடுதலை சக ஜீவியின் பால் பரிவு கொள்வதன் மூலமே ஈடேறுமாறு அமைவது மனித
வாழ்வின் paradox! எனவே யாரும் இங்கு தனித் தீவு கிடையாது.

ஒன்றின் பால் மற்றொருவர் சார்ந்தே உள்ளோம். அவ்வகையில்
சகோதரர் நண்.செந்தில் நாதன் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது
அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெம்பும் தைரியமும் அளிக்கும்
என்பது திண்ணம்.

இப்பிரார்த்தனை என்பதை நீங்களெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்,
எப்படி நடத்துவீர்கள்? இல்லத்திலா? கோவிலிலா? மசூதியிலா என்று எனக்குத்
தெரியாது.

ஆயினும், சகோதரர் நண்.செந்தில் நாதன் அவரது நலத்திற்காக அவரது அறுவைச்
சிகிச்சை நல்லபடியாக நடக்க ஒரு நிமிடம் நீங்கள் சிந்தித்து இருந்தால் கூட
அது இந்த முயற்சிக்கு
உரம் சேர்ப்பதாகும். கூட்டுப் பிரார்த்தனைகளை முன்பே சுவைத்தவர்கள்
நண்பர்களுடன்/குடும்பத்துடன் சேர்ந்தோ, அல்லது அவரவர் வழிபடும்
ஆலயங்களில் இருந்தோ செய்யலாம்.

நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் இணைந்து
பிரார்த்திக்கும்போது அய்யா இராமகி அவர்களின்
பின்வரும் பிரார்த்தனையை உரக்கப் படித்து பிரார்த்தித்தால்
நிச்சயம் எல்லாம்வல்லவனின் கருணை கிட்டும்
நண்.செந்தில் நாதன் அவர்களுக்கு!

இப்பிரார்த்தனை பற்றிய உங்களது அனுபவங்களை நீங்கள் பின்னால்
எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அது எல்லோருக்கும் பயன்படும்.

கூட்டுப்பிரார்த்தனை நாள்: வியாழன் நேரம்: காலை 6 மணி

எங்கும் நீக்கம் அற நிறைந்திருக்கும்
பேரொளியாகிய பரம் பொருளே!
எல்லாம் வல்ல இறைவா!
மலையில் இருந்து புறப்படும் ஆறுகள்
எந்த வழியில் வந்தாலும்
கடலைத்தான் சேருகின்றன.
நாங்கள் நடந்து வந்த வழி,
காடானால் என்ன, நாடானால் என்ன
மலையானால் என்ன, மடுவானால் என்ன
வெளியானால் என்ன, மறைவானால் என்ன,
நிலத்தின் சாய்வு
எம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது
இந்த வழி கங்கையாக, காவிரியாக,
எல்லாமே புனிதம் தான்,
எந்த நெறியின் வழி உம்மை உணர்ந்தாலும்
அது உமக்கு உகந்ததே!

ஒவ்வொரு நெறியும் எம்மை
நல் வாழ்க்கைக்கே ஆட்படுத்துகின்றன.
இந்த நெறிகளின் வழி, உம்மையே நினைந்து,
யான், எனது, என் மக்கள், என் சுற்றம், எம் உறவு
என்ற வலையில் இருந்து விடுபட்டு
எம் நண்பர், எம் அன்பர், எம் நாடு, எம் மனிதம்,
எம்மோடு உறவாடும் எல்லா உயிர்கள்
என்று மனம் விரிவடைவதும் ஒரு வேள்விதான்.

இந்த வேள்வியில்,
எல்லா உயிர்களுக்குமாக
பரிந்து வேண்டுவதும் எம் கடமைதான்.
இந்த மக்களும், உயிர்களும்
உம்மை அடைவதற்கே பிறந்திருக்கின்றனர்!
எங்கள் வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும் கலந்தே வரும்
என்ற இயற்கையை நாங்கள் அறிந்திருக்கிறோம்;
இருந்தாலும்,
நோவு கண்டவிடத்து
"அம்மா" என்று அரற்றும் குழந்தையைப் போல,
ஒவ்வொரு துன்பத்திலும்,
"இறைவா" என்று
எம்மைக் காப்பாற்ற வேண்டுகிறோம்!

அய்யா, எங்கள் நண்பரும் சகோதரரும் ஆன நண்.செந்தில் நாதன்
இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் தேசிய இதய மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உம்மையே எண்ணி,
ஓக நிலைக்குத் ஒன்றுபட முயலும்,
உம் அடியாருக்கு
உம்மை விட்டால் யாரிருக்கிறார்?

புகலிடம் தந்தவிடத்தில் முறையிடாமல்
வேறு யாரிடத்தில் சொல்ல முடியும்?

இந்த ஊறுகள் விலகி,
உடல் நலம் பெற்று
தன்னைச் சுற்றி உள்ள அனைத்து உயிர்க்கும்
தொண்டாற்றுகிற பணி
இன்னும் அவர்க்கு இருக்கிறது!

எல்லாம் வல்ல இறைவா! அவருக்கு,
சிகிச்சை எவ்வித சிரமமும் இன்றி நடந்தேறவும், நலம் சிறக்க,
உள்ளார்ந்த தெம்பைக் கொடு!

உன் பெருமை பாடி,
இன்னும் பலகாலம் தொண்டாற்றட்டும்.
நாங்கள், இதைக் கொடுத்து அதை வாங்கும்
வணிகர்கள் அல்ல,
தாயின் அமுது நாடி நிற்கும்
பச்சைக் குழந்தைகள்.
அம்மா, அமுது கொடு.

திரு.செந்தில்நாதன் என்னும் அருமைச் சகோதரருக்கு
நலம்வேண்டி உன்னிடம் இறைஞ்சுகிறோம்!

எங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது
என்று உளமாற கண்கள் கசிய வேண்டுகிறோம்!

பிரார்த்தனை நாள்:‍ வியாழ‌க்கிழமை
நேரம் :‍ காலை 6 மணி அவரவர் நேரப்படி!

அன்புடன்,
ஆல்பர்ட்,
தமிழ் உலக பிரார்த்தனை
மையம் சார்பில்.

தமிழ்மணம் வாழ..வளர வாழ்த்து!!

தமிழ் மணம் கமழும் தமிழ்மணமே!
தமிழ் மண‌ம் வீசும் தமிழ்மணமே!

தமிழ் வலைப் பதிவர்களை ஒருங்கிணைத்த தமிழ்மணமே!
தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்து படைத்த தமிழ்மணமே!

தமிழ் உணர்வுகளுக்கு வித்திட்ட தமிழ்மணமே
தமிழ் உறவுகளுக்கு பாலமிட்ட தமிழ்மணமே!

தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்திடும் தமிழ்மணமே!

தமிழ் சேவையில் புரிந்தது ஏராளம் தமிழ்மணம்!
த‌மிழ் தேவை ய‌றிந்து உதித்த‌து த‌மிழ்ம‌ண‌ம்!

தமிழ் மூலைமுடுக் கெல்லாம் சென்ற தமிழ்மணம்!
தமிழ் வலைதிரட்டிக்கு அன்னையாம் தமிழ்மணம்!
த‌மிழ் க‌லைக‌ள் வ‌ள‌ர்க்கும் அர‌ச‌னாம் த‌மிழ்ம‌ண‌ம்!

த‌மிழ்ம‌ண‌ம் த‌வ‌ழ்ந்து ஐந்து ஆண்டுக‌ளாயிற்றா?
த‌மிழ்ம‌ண‌ம் முகிழ்த்து ஐந்து நொடியே ஆனதுபோலிருந்தாலும்
த‌மிழ்ம‌ண‌ம் வ‌ள‌ர்ந்து ஐம்ப‌தாண்டு ஆன‌ முதிர்ச்சி!

காசிக்குப் போனால் க‌ரும‌ம் தொலைக்க‌லாம் என்பார்க‌ள்! - இந்த‌க்
காசி உருவாக்கிய‌ த‌மிழ்ம‌ண‌ம் வ‌ந்தாலே போதுமே ந‌ம் க‌ரும‌ங்க‌ள் தொலைய‌!

இந்தியமொழிக‌ளின் முத‌ல் விழியாய் முளைத்த த‌மிழ்ம‌ண‌ம்
ப‌ல்லாண்டு... பல்லாண்டு... ப‌ல்லாயிர‌த்தாண்டு ப‌ய‌ணிக்க‌
தமிழ்மண நிர்வாகத்துக்கு என்னினிய‌ அடிம‌ன‌த்து வாழ்த்தை
இங்கு ப‌திவு செய்கிறேன்.
ஆல்ப‌ர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.