Wednesday, September 16, 2009

தென்கச்சியாரும் நானும்...!

தென்கச்சியாரும் நானும்...!

தென்கச்சியார் எவ்வளவோ பேரை நாளும் சிரிக்க சிந்திக்க வைத்தவர் இப்போது எல்லோரையும் அழவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் மறைவு எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.

சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர்.

அவர் காலையில் சொல்லும் இன்று ஒரு தகவலுக்காகவே வானொலியின்
காதைத் திருகுவார்கள் அவரது ரசிகப்பெருமக்கள். அந்த ஏராள ரசிகர்களில் நானும் ஒருவன். அவரின் முகமறியாத ரசிகனாக இருந்த நான் பிற்பாடு அவரோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன்.

1993ல் சென்னை வானொலியில் காலை மலர் மற்றும் நுகர்வோருக்காக போன்ற பகுதிகளை நான் வழங்கிவந்தேன். அப்போது அடிக்கடி சென்னை வானொலி நிலையம் செல்லும்போது அவரைச்
சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த ஞானப்பிரகாசம் அவர்கள்தான் என்னை தென்கச்சியாருக்கு அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து வானொலி நிலையம் செல்லும்போதெல்லாம் சந்திக்கத் தவறுவதில்லை.

அவரை வைத்து மியூசிக் அகாதமி மற்றும் வானொலி நிலையத்திலேயே நுகர்வோருக்காக விழாக்களை நடத்தியுள்ளேன். அவர் நுகர்வோருக்காக நிகழ்ச்சி தயாரிப்பாளர் கூடுதல் பொறுப்பிலிருந்தபோது நிகழ்ச்சிக்காக என்னை ஒலிப்பதிவு செய்துள்ளார். எவ்வளவோ நினைவுகள் என்னுள் அரும்புகிறது.

அன்றைக்கும்....இன்றைக்கும் நான் எழுதும் சில செய்திகளின் முடிவில் அவரைப்போல இல்லையென்றாலும் ஒரு நகைச்சுவையைச் சொல்லி முடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

அமெரிக்கா வந்த பிறகும் அண்ணாச்சி என்னிடம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

கனடா வான்கூவர் மற்றும் அமெரிக்க தென்றல் வானொலிகளில் "செவிக்கினிய சிந்தனைகள்" என்று வழங்கிவந்தேன். அதைப்பற்றிக்கூட அவரிடம் உங்களைப்போல சொல்ல முயல்கிறேன் என்ற போது
நகைச்சுவையாக தென்கச்சி ஆல்பர்ட் என்று உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளவில்லையே என்று சிரித்தார்.

சென்னை வரும்போது சந்தியுங்கள் என்றார். எத்தனையோ முறை சென்னை சென்றும் சந்திக்கமுடியாமலே சென்றவர்களுள் அண்ணாச்சியும் ஒருவர்.

இந்த முறை கூட முயற்சி செய்தேன். முடியவில்லை. முடியாமலே போய்விட்டது. என் இனிய நண்பர் ஒருவர் கடந்தவாரம் மறைந்த தகவல் கிடைத்தது. ஒரு இரங்கல் கவிதை எழுதி அனுப்பினேன். அதை மீண்டும் இங்கே அண்ணாச்சிக்காக பதிகிறேன். அண்ணாச்சி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களை மீளவும் எங்களால் உயிர்ப்பிக்க முடியுமானால்.....!

ஒரே ஒரு நாள் இல்லை
ஒரே ஒரு மணிநேரம்

உங்களை மீளவும்
எங்களால் உயிர்ப்பிக்க முடியுமானால்,
நாங்கள் வெளிக்கொட்டாத அன்பு மழையால்
உங்களைத் திக்குமுக்காட வைப்போம்;அதுமாத்திரமல்ல‌
உங்களிடம் சொல்லுவதற்கு எண்ணற்ற சேதிகள் எம்மிடமுண்டு.

உங்களை மீளவும்
எங்களால் உயிர்ப்பிக்க முடியுமானால்,

நாங்கள் சொல்லுவோம் பொக்கிசமாக
உங்களை எப்படியெல்லாம் நினைத்திருந்தோமென்று.
எங்கள் வாழ்வில் நீங்கள் இருந்த தருணங்களைப் போல்
எங்கள் வாழ்வில் எவரும் இருந்ததில்லையென்போம்.

உங்களை மீளவும்
எங்களால் உயிர்ப்பிக்க முடியுமானால்,

எவ்வளவு தூரம் உங்களை இழந்து
நாங்கள் துயருருகிறோம் என்று
உங்களுக்கு உரத்துச் சொல்லுவோம். இது
எங்களால் முடியுமானால்
நாங்கள் செய்வோம்.

-ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா